விருதுநகர் : ராமநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவரை கடந்த செப் 2ம் தேதி 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்ற நிலையில், மர்ம கும்பலை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்ட தகராறில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில், டிஎஸ்பி தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இந்நிலையில், டிஎஸ்பி தலைமுடியைப் பிடித்து இழுத்து அத்துமீறிய விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டும். இல்லாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது ஆக்ரோஷ தாக்குதல்; ஏழு பேர் கைது - ஒருவர் தப்பியோட்டம்! - Attacking on Aruppukkottai DSP