மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் அம்மன் சன்னதிக்கும், சொக்கநாதர் சன்னதிக்கும் இடையில் சுமார் எட்டு அடி உயரம் உள்ள மிகப்பிரமாண்டமான முக்குறுணி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் தோண்டப்பட்ட சமயத்தில் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு மண்ணுக்கு அடியிலிருந்து இந்தப் பிள்ளையார் கிடைத்ததாக பக்தர்களால் இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது.
நாயக்கர் கால கலைப் பணியில் அமைந்துள்ள இந்த விநாயகர் சிலையை, மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தவர் கந்தப்பொடி பெத்து செட்டி என்பவர் ஆவார். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று முக்குறுணி அரிசியில் இந்தப் பிள்ளையாருக்கு தொடர்ந்து கொழுக்கட்டை படைக்கப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் பிள்ளையாருக்கு சிறப்பு கொழுக்கட்டை படையல், தீபாராதனை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 18 படியிலான பெரிய கொழுக்கட்டை நெய்வேத்தியம் படைக்கப்பட்டு சிறப்பு தீபராதனைகள் நடத்தப்பட்டன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “மகாவிஷ்ணுவை மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க” போலீசில் புகார்!