விழுப்புரம்: சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (21). இவர் கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு பி.காம் படிப்பு படித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்த பவித்ராஸ்ரீ (20) வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து திருவண்ணாமலை கோயிலுக்கு கிரிவலம் செல்ல பைக்கில் சென்றுள்ளனர். அப்போது விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே இவர்களது பைக்கை இருவர் வழிமறித்து, செல்போனை பிடுங்கிக் கொண்டு பவித்ராஸ்ரீயையும் கடத்திச் சென்றுள்ளனர்.
காதலியைத் தேடி ரமேஷ் சென்றுள்ளார். அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களும் பவித்ராஸ்ரீயிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளனர். இதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க தேசிய நெடுஞ்சாலையில் பவித்ராஸ்ரீ ஓடி உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பவித்ராஸ்ரீ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் பவித்ராஸ்ரீ உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாகக் கல்லூரி மாணவர் ரமேஷை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இரு இளைஞர்கள் அத்துமீறியபோது அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. காதலன் ரமேஷ் அளித்த தகவலின் படி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதையடுத்து போலீசார் ஒரு இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மற்றொரு இளைஞர் விக்கிரவாண்டி கப்பியாம்புலியூர் ஏரிக்கரை அருகே மறைந்து இருப்பதாகத் தகவல் அளித்தார். அவர் இருக்கும் இடத்தை தேடி போலீசார் சென்றனர்.
அப்போது அந்த இளைஞர் போலீசாரைக் கண்டதும் தான் மறைந்து வைத்திருந்த ஆயுதத்தால் போலீசார் இருவரைத் தாக்கி விட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார். அதனையடுத்து தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் அந்த இளைஞரை சுட்டுப் பிடித்தார். பின்னர், காயமடைந்த இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் காயமடைந்த இரு போலீசாரும் முண்டியபாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜார்கண்டில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து - 2 பேர் சடலம் மீட்பு!