தஞ்சாவூர்: கும்பகோணம் வட்டம் 33 மாங்குடி ஊராட்சி மற்றும் 34 விட்டலூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட குடமங்களம், நடுவக்கரை, மாங்குடி, தெற்கு மூலங்குடி உள்ளிட்ட கிராமங்களில், கீர்த்திமானாற்று நீர்நிலை மற்றும் நீர்வழி போக்குவரத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறையினரின் இந்தச் செயலைக் கண்டித்து இரு ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராம மக்களும் ஒருங்கிணைந்து இதனைக் கண்டித்து கும்பகோணம் மாநகர் முழுவதும் இந்த தீபாவளியைத் துக்க தீபாவளியாக அனுசரிக்க இருப்பதாகவும், 31 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு குடமங்களம் கடைவீதியில் கருப்பு கொடி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தஞ்சையில் இருந்து மலேசியா முருகன் கோயிலுக்கு பறக்கவிருக்கும் 70 அடி உயர வேல்..!
இதனைத் தொடர்ந்து இன்று(அக்.30) கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில், கும்பகோணம் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில், பொதுப்பணித்துறை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் பிரதிநிதிகள் கொண்டு குழுவினரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்பாளர்களே அகற்றிக் கொண்டால் எந்தவித பிரச்சனையும் இல்லை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்ததால் இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்ததால் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து நாளை 31 ஆம் தேதி குடமங்களம் கடைவீதியில் நடைபெறுவதாக இருந்த கருப்புக் கொடி ஏற்றும் போராட்டமும், துக்க தீபாவளியாக அனுசரிக்கும் முடிவும் திரும்பப் பெறப்பட்டது.