தஞ்சாவூர்: இறந்தவருக்கு அஞ்சலி செலுத்த துக்க வீட்டிற்கு செல்லும் போது மாலைகள் வாங்கிச் செல்வது தமிழகத்தில் வழக்கமான ஒரு செயலாக இருந்து வருகிறது. இந்த மாலைகளில் உள்ள பூக்கள் உதிர்ந்து சாலைகளில் யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாகும்.
ஆனால் இந்த வழக்கத்தை மாற்றி மாலைகளுக்கு பதிலாக அவர்களால் முடிந்த பணத்தை பகிர்ந்து இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு மேலையூர் கிராமத்தை சேர்ந்த மக்கள். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூரத்தி.
இவரது மகன் திருப்பதி (வயது 35), தச்சு வேலை பார்த்து வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தனது இரு சக்கர வாகனத்தில் ஒரத்தநாடு - மன்னார்குடி சாலையில் செல்லும்போது பொட்டலங்குடிக்காடு என்னும் இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு 3 வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜன 18ஆம் தேதி இரவு திருப்பதி உயிரிழந்தார். கடந்த ஒராண்டு காலமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததால் அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்குள்ளானது.
இதையும் படிங்க: அரிச்சல்முனையில் பிரதமர் மோடி! கோதண்ட ராமர் கோயிலில் சாமி தரிசனம்!
இந்நிலையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி அவரது வீட்டில் திருப்பதி இறந்த துக்கம் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த துக்கத்திற்கு வருகை தரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இறந்த உடலுக்கு அஞ்சலி செலுத்த மாலை வாங்குவதற்கு பதில் அதற்கான தொகை ரொக்கமாக கொடுத்தால் அவரது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என கருதிய அவரது நண்பர்கள் மொத்தமாக மாலைகளை கடையில் இருந்து வாங்கி வந்து வைத்துக் கொண்டனர்.
பின்னர் துக்கத்திற்கு வருபர்கள் யாரும் அவர்கள் வரும்போதே மாலை வாங்க வேண்டாம், விருப்பம் உள்ளவர்கள் துக்க வீட்டில் தங்களால் முடிந்த தொகையை ரொக்கமாக கொடுத்து மாலை வாங்கி அஞ்சலி செலுத்தலாம் என தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பொது மக்களும், உறவினர்களும் துக்க வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தங்களால் முடிந்த பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து மாலையை வாங்கி அஞ்சலி செலுத்தினர்.
இவ்வாறாக அஞ்சலி செலுத்து வந்த அனைவரும் தங்களால் முடிந்த தொகையாக ரூ.100 முதல் ரூ.1000 வரை ரொக்கமாக செலுத்திவிட்டு அந்த மாலையை வாங்கி அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். காலை முதல் நண்பகல் வரை நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் மொத்தம் 35 ஆயிரத்து 350 ரூபாய் பணம் கிடைத்தது. இந்தத் தொகையை அவரது நண்பர்கள் திருப்பதியின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.
இறந்தவர்களுக்கு மாலைகளால் அஞ்சலி செலுத்தும் வழக்கமான பழக்கத்தை மாற்றி இறந்தவரின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் நண்பர்கள் சேர்ந்து செய்த இந்த செயல் அனைவரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.