விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மறைவைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்கள், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.
இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது குடும்பத்தினருடன் அன்னியூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42வது வாக்கு சாவடியில், இன்று காலை 7 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா, "எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன். முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி நிச்சயம், விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அதேபோல், பனையபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் களமிறங்கியுள்ள பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதனிடையே, விக்கிரவாண்டி தொகுதியில் 68வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேனீக்களால் பிரச்சனை: மேலும் விக்கிரவாண்டி நகரப் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் 229வது வாக்குச்சாவடியில் மொத்தம் 1400 வாக்காளர்கள் இன்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்பட்ட போது, வாக்கு பதிவு மையத்திற்குள் தேன்கூடு இருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மேலும் சில தேனீக்கள் அப்பகுதியில் உலா வர தொடங்கியதால் வாக்காளர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தேன் கூட்டை உடனடியாக கலைத்தனர். இச்சம்பவம் வாக்குப்பதிவு செய்ய வந்த வாக்காளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
கடைகள் அடைப்பு: விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலால் பால் விநியோகம் மற்றும் மருந்து கடைகளை தவிர பிற கடைகள் காவல்துறையினர் மூடச் சொன்னதால் காணை பகுதியில் தேர்தலை புறக்கணித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தியதை அடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு மும்முரம்! - Vikravandi By Election Polling