சென்னை: விஜய தரணி அவசரப்பட்டு விட்டார், எம்பியாக வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் பாஜகவிற்கு சென்றார், ஆனால் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது, வேறு ஏதாவது வாய்ப்பு கொடுக்கிறார்களா என்று பார்ப்போம் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக நான் போட்டியிடுகிறேன். எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. ராகுல் காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி உட்படக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
பாஜக தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், வளர்ந்து விட்டதாகவும் கூறிவரும் நிலையில், அது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “தேர்தல் முடிவின்போது தான் தெரியவரும், தொடர்ந்து தமிழகத்தில் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் வந்திருந்தார், ஆனால் இங்கு மக்களின் விழிப்புணர்வு தெளிவாக உள்ளது.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவாக உள்ளனர். அந்த வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெரும். பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றியடைவோம். காங்கிரஸ் கட்சியில் ஒரே தொகுதிக்கு அதிகப்படியான வேட்பாளர்கள் விண்ணப்பிக்கும் போது, அதனை முறையாக ஆய்வு செய்து பட்டியல் வெளியிடுவதில் சிறிது தாமதம் ஏற்படலாம், இதில் எந்த குளறுபடியும் இல்லை”, என விளக்கமளித்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விஜய தரணி வெளியேறியது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அவசரப்பட்டு விட்டார் என்று தான் கூற வேண்டும், இன்னும் இரண்டு ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கலாம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் இணைந்து விட்டார், இந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது, வேறு ஏதாவது வாய்ப்பு கொடுக்கிறார்களா என்று பார்ப்போம்.
தேர்தல் பிரச்சாரத்தில் அந்தந்த கட்சித் தலைவர்கள், அவர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருவார்கள், போவார்கள். யார் வந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் திமுகவிற்கும், காங்கிரசிற்கும் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். நான் மட்டுமல்ல லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் எங்கள் கூட்டணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்”, என கூறினார்.