சென்னை: விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதாரணி, காங்கிரஸில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அவர் தனது விளவங்கோடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில், 'எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என தாமே கைப்பட எழுதிய கடிதத்தினை வெளியிட்டுள்ளார். தனது ராஜினாமா தொடர்பாக அவர் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், முக்கிய தலைவர்கள் தங்கள் சொந்த கட்சியில் இருந்து எதிரணிக்கு தாவும் கட்சித்தாவல் வழக்கமான ஒன்று. அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து பாஜகவில் இணைவதை பெருமையாகக் கருதுவதாக தெரிவித்த விஜயதாரணி, சிறு வயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்ததாகவும், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், பாஜகவுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே, அவர் தாமாகவே, தனது விளவங்கோடு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதாரணி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய காரணம் என்ன?