வேலூர்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக பெங்களூர், மும்பை, கோவா, சூரத், அகமதாபாத் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு சென்று வர முடியும்.
அதேபோல் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்ல இந்த சாலை பெரிது பயன்படுகிறது. இதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், சட்டவிரோதமாகத் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட பொருள்களை இந்த சாலை வழியாக கடத்தி வருகின்றனர்.
ஆனால் இதனை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் போலீசார், கடத்தப்படும் பொருள்களைப் பறிமுதல் செய்வதுடன், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குட்கா உள்ளிட்ட பொருள்கள் கடத்தி வரப்படுவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
போலீசார் வசூல் வேட்டை? இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், அவ்வழியாக வரும் வாகனங்களைத் தீவிர சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே 2 போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் வாகனங்களைச் சோதனை செய்யாமல், வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அந்த வீடியோவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த 2 போலீசார், அவ்வாழியாகச் செல்லும் லாரி, குட்டி யானை மற்றும் கனரக வாகன ஓட்டிகளிடம் மாமுல் வாங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அண்மையில் போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர், "வாகன் ஓட்டிகளிடம் இது போன்ற சம்பங்களில் ஈடுபடும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், ஒரு சிலர் செய்யக் கூடிய தவறுகளால் ஒட்டுமொத்த துறைக்கும் களங்கம் ஏற்படுகிறது எனக் கடும் கோபத்துடனும், வேதனையுடனும் பேசியிருந்தார். இந்தநிலையில் போலீசார் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ் அப் சேனில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5வது வழக்கறிஞர் கைது.. யார் இந்த மாத்தூர் சிவா?