தஞ்சாவூர்: கும்பகோணம் கணபதி அக்ரஹாரம் அருகே உள்ள ஈச்சங்குடி அக்ரஹாரத்தில் காஞ்சி மகா பெரியவரின் தாயார் பிறந்த வீட்டில் மகாலட்சுமி வேத பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த வேத பாடசாலையில் வழக்கமாக பூஜைகள் முடிந்தவுடன் அங்கு பணியாற்றுபவர்கள் பூட்டிவிட்டுச் செல்வது வழக்கம். அதேபோல, கடந்த ஜூலை 3ஆம் தேதி இரவும் பூஜைகள் முடிந்து வழக்கம் போல் வேத பாடசாலையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் (ஜூலை 4) காலையில் பாடசாலை மேலாளர் நடராஜன் வந்து பார்த்த போது, பாடசாலையின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மேலாளர், வேகமாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, வெள்ளியிலான வில்வ மாலை, வெள்ளியிலான சொம்பு, வெள்ளி வேல் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. திருடப்பட்ட வெள்ளிப் பொருட்கள் கிட்டத்தட்ட ஒரு கிலோ இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பின்னர், இதுதொடர்பாக பாடசாலையில் இருந்து அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கபிஸ்தலம் போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வேத பாடசாலைக்குள் அதிகாலை 4 மணிக்கு நுழையும் 2 மர்ம நபர்கள், முகத்தை முகமூடி போட்டு மூடிக்கொண்டு திருடிச் செல்வது தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார், வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் இருவரும் யார் எனத் தீவிரமாக தேடி வருகின்றனர். பாடசாலையில் அரங்கேறிய திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.