திருப்பத்தூர்: நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தலைமையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோமலாபுரம், பெரிய கொமேஸ்வரம், சாத்தம்பாக்கம் உள்ளிட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இக்கூட்டத்தில் பேசிய கதிர் ஆனந்த், “வேலூர் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த உங்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை யாரும் இவ்வளவு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது. கிராமப் பகுதி மக்கள் என்னிடம் கேட்பது 100 நாள் வேலை திட்டம் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என உறுதி அளித்தோம். ஆனால் வட மாநிலங்களில் ஓட்டை மாற்றி போட்டதால், மோடி ஆட்சிக்கு வந்துள்ளார். எனவே நாடாளுமன்றத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்ற கேட்டோம். அதற்கு மோடி 100 நாள் வேலைத் திட்டத்தை இந்தியாவில் ஒழிக்கப் போகிறேன் என்றார்.
உடனே நாங்கள், கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பி பலர் உள்ளனர். ஆகையால், 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டாம். 150 நாட்களாக உயர்த்தவும் வேண்டாம். யார் யார் எல்லாம் 100 நாள் வேலையைக் கேட்கிறார்களோ, அவர்களுக்கு வேலை வழங்குங்கள் என தெரிவித்து இருக்கின்றோம். அதற்கான பதிலை செப்டம்பர் மாதம் மோடி கூறுவார். நான் கடவுளை வணங்கக் கூடியவன்.
நான் என் குலதெய்வத்திடம் வேண்டியுள்ளேன். மோடி மனது மாறி நல்ல புத்தி வந்து, 100 நாள் வேலைத் திட்டத்தை கேட்பவர்களுக்கெல்லாம் தருவார் என வேண்டியுள்ளேன். பிரதமர் மோடி 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுதல் ஏதாவது செய்தால், மத்திய அரசை கண்டிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தை பெற்றுத் தர போராடுவேன்” என்றார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சோமலாபுரம் பகுதிகளுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனக்கூறி, கருப்பு கொடி கட்டி, கருப்புச் சட்டை அணிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டத் தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வனை ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் கைது செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "நாங்கள் ஒரு தலித் நபரை முதலமைச்சர் ஆக்குவோம்" - வன்னியர் சங்கம் மாநிலச் செயலாளர் உறுதி! - Vanniyar Sangam