வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டு சாலைகள் சேரும் சகதியமாக உள்ளதால்,மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி, பாதாள சாக்கடை பணிக்காக வரும் ஜே.சி.பி இயந்திரங்கள் மின் கம்பங்களை உரசுவதால், வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ், ஃபேன், போன்ற பொருட்கள் பழுதாவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு, அத்திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணியால் வேலூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
வேலூர் வசந்தபுரம்,கே.கே.நகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மாநகராட்சி பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவு நீர் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆங்காங்கே மூடப்படாமலும், பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் சாலையை சீரமைக்காமலும் கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், சாலையில் நடக்க முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக உள்ளதாகவும், பள்ளி கல்லூரிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சேறும் சகதியான சாலையில் வழுக்கி விழுந்து விடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். அதனை தொடர்ந்து, ஜேசிபி மூலம் பணி மேற்கொள்ளும் போது மின்கம்பத்தில் உரசி டிவி, பிரிட்ஜ், ஃபேன் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதாவதாகவும் அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் சாலை பாதாள சாக்கடை ஒப்பந்தாரரிடம் முறையிட்டால் அவர்களும் சம்பந்தமில்லாத வகையில் பதில் சொல்வதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சாலையில், பாதாள சாக்கடைக்கள் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.