ஈரோடு: இது தொடர்பாக சித்தோடு காவல்துறையினர் அளித்த தகவலின் படி, சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி செக்யூல் லாஜிஸ்டிக் என்ற பெயரில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி முழுவதும் பல்வேறு தனியார் நகைக்கடைகளுக்கு அனுப்ப வேண்டிய தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் நிரப்பப்பட்டிருந்தது. சுமார் 810 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 666 கோடி என கூறப்படுகிறது.
லாரியை ஓட்டுநர் சசிக்குமார் (வயது 29) ஓட்டி வர துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் பால்ராஜ் (வயது 40) மற்றும் உதவியாளர் நவீன் (வயது 21) ஆகியோர் உடன் வந்துள்ளனர். சேலம் நோக்கி சென்ற வாகனம், வளைவில் சென்ற போது நிலை தடுமாறிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சசிகுமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் ஓட்டுநர் சசிகுமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோரை மீட்டு, சிகிச்சைக்காகப் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தங்க நகைகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனத்தைக் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அதன் பின், வணிகவரித்துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு, மாற்று வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் தங்க நகைகளை மீண்டும் சேலம் நோக்கி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாகச் சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் காயம்! - Erode Bus Accident