சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. இதில் தக்காளி, வெங்காயம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 விழுக்காடு மட்டும் தான் வருகிறது, மீதம் 95 விழுக்காடு வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது.
வெளிமாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தக்காளி வெங்காயம் வரத்து குறைந்து விலை ஏற்றமாக இருந்தது. இந்நிலையில், வடமாநிலங்களில் சற்று மழை பெய்ய தொடங்கியதால் காய்கறி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறி விலை தற்போது குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தக்காளி ஒரு கிலோ 40 ரூபாயும், வெங்காயம் கிலோ 30 -50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி, வெங்காயம் விலை குறித்தும், காய்கறிகள் விலை குறித்தும் கோயம்பேடு காய்கனி, மலர் வியாபார சங்க பொருளாளர் சுகுமாறன் கூறுகையில், “கடந்த 10 தினங்களாக தக்காளி, வெங்காயம் வரத்து கூடியுள்ளதால் தக்காளி விலை கிலோ 40 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறி லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விலை குறைய தொடங்கி உள்ளது. முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் காய்கறிகளின் விலை மீண்டும் உயரவும் வாய்ப்புள்ளது" என்று சுகுமாறன் தெரிவித்தார்.
அதேசமயம், "பச்சை பட்டாணி சீசன் இல்லாத காரணத்தால் கோயம்பேடு சந்தையில் பச்சை பட்டாணி, பீன்ஸ் மற்றும் அவரைக்காய் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 70 முதல் 80 ரூபாய்க்கும், அவரை கிலோ ரூ.120க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 100 க்கு விற்படுகிறது.
அதேபோல் வரத்து குறைவால் பச்சை பட்டாணி கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெண்டைக்காய் ரூ. 40-க்கும், சௌசௌ ரூ. 60க்கும், முள்ளங்கி ரூ. 40க்கும், பாகற்காய் ரூ. 40க்கும், பீர்க்கங்காய் ரூ. 40 ரூபாய்க்கு, சாம்பார் வெங்காயம் 80 முதல் 90 ரூபாய்க்கும், கொத்தவரங்காய், சுரைக்காய் ரூ.30க்கும் விற்கப்படுகிறது.
முருங்கைக்காய் 60 முதல் 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் 40- 50 ரூபாய்க்கும், நூக்கல் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 50-40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35-40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வரும் தினங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதால் காய்கறி விலை இதைவிட உயர வாய்ப்புள்ளது" என்று சுகுமாறன் தெரிவித்தார்.