மதுரை: ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி நலனுக்கு எதிராக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்நிலைக் குழு ஆலோசித்து முடிவு செய்யும். விசிகவில் யார் தவறு செய்தாலும், முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், “விடுதலை சிறுத்தைகள் மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை.
விசிக குறிவைக்கப்படுகிறது என்பதைவிட திமுக கூட்டணி குறிவைக்கப்படுகிறது. திமுக கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி சதி திட்டம். அதற்கு விசிகவை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என நினைக்கின்றனர்.
வேளச்சேரி தீர்மானம்:
கட்சியில் துணை பொதுச் செயலாளர் 10 பேர் உள்ளனர். அதில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறும் போது, கட்சி செயல்பாட்டுக்கு ஊறு விளைவிக்கிற வகையில் செயல்படும்போது தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது நடைமுறை.
குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பதை உறுதிப் படுத்தியபிறகே நடவடிக்கை என்பது எங்கள் நடைமுறையாக உள்ளது. இது முழுமையான அரசியல் கட்சி ஆவதற்கு வேளச்சேரி தீர்மானம் என்பதை 2007-இல் நாங்கள் நிறைவேற்றினோம்.
விரைவில் நடவடிக்கை:
தலித் அல்லாதவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தலைவரின் கடமை. ஆகவே, ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஆதவ் அர்ஜுனாவிடம், அவரது கருத்துக்கு விளக்கம் கேட்கப்படும்" - திருமாவளவன் பதில்..!
அதனை கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதுகுறித்து நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன். விசிகவில் யார் தவறு செய்தாலும் முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான முடிவு விரைவில் வரும்.
விஜய் மீது எந்த சங்கடமும் இல்லை:
விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு விஜய் திமுக அரசை முதன்மையான எதிரி என்று வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், நானும், விஜயும் அரசியல் பேசாமல் நூல் வெளியீட்டு விழாவில் இருந்தாலும் கூட அதை அரசியலாக்குவார்கள்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. சூதாட்டம் ஆட விரும்புகிறவர்கள் தமிழக அரசியல் களத்தில் கலவரத்தை உருவாக்குவார்கள், குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்,” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய் திருமாவளவனுக்கு கூட்டணி அழுத்தம் தரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
விஜய்யின் கருத்துக்கு பதில் அளித்த திருமாவளவன், விஜய்யின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை, எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுகிறது என்று பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.