சென்னை: சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முன்பாக வைக்கப்பட்ட அவரது படத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறுகையில், “அம்பேத்கருக்கு உற்ற துணையாக இருந்து மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர் சிவராஜ். அவரது சிலை இங்கு பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. அருகில் உள்ள பூங்காவில் இந்த சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்.
துணை முதல்வராக இன்று பதவி ஏற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருக்கு ஸ்டாலின் துணை முதல்வராக பணியாற்றினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்று உள்ளார். நிச்சயமாக முதல்வர் ஸ்டாலினுக்கு இவர் ஆட்சி நிர்வாகத்தில் உறுதுணையாக இருப்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். கூட்டணி கட்சி என்ற முறையில் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: "வாரிசு அரசியலை முன்வைக்க பாஜகவிற்கு தகுதியில்லை" - செல்வப்பெருந்தகை!
மேலும், வரும் காலங்களில் பட்டியலின சமுதாயத்தில் உள்ளவர்கள் துணை முதலைமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஆவதற்கான சூழல் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், “திமுக கட்சியில் உள்ளவர்களின் விருப்பப்படி தான் இந்த அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்.
திமுகவில் தலையிட்டு நாம் கோரிக்கைகளை எழுப்ப முடியாது. பட்டியிலின மக்கள் முக்கிய அதிகாரமிக்க இடங்களுக்கு வரவேண்டும் என்பது நமது இலக்கு. இவை எல்லா மாநிலங்களிலும் முன்மொழியப்படுகிறது. விசிக மற்றொரு கட்சியில் தலையிட முடியாது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்