அரியலூர்: இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் விசிக விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இம்முறையும் அக்கட்சிக்கு அதே இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்தமுறை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக தலைவர் திருமாவளவனே, தற்போதும் அங்கு களம் காண்கிறார். அந்த வகையில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் சட்டமன்றத் தொகுதியில், இரண்டாவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "நரேந்திர மோடியே முதலமைச்சர் ஸ்டாலினின் அரசியல் எதிரி. இந்த நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. சங்பரிவார் அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான போர். இதில் பொதுமக்களுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி உள்ளது. அதிமுக அணி வேறு, பாஜக அணி வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஒன்றாக இருந்தபோதே வெற்றி பெற முடியவில்லை. ஆகவே, பிரிந்து நின்று வெற்றி பெறமுடியாது என்று அவர்களுக்கே நன்றாகவே தெரியும்.
எனவே இது அரசியல் நாடகம். அதிமுகவும், பாஜகவும் அரசியல் நாடகம் ஆடுகின்றனர். மக்கள் விரோதச் சட்டங்களான வேளாண் மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் இட ஒதுக்கீடுகள் அமலாக முக்கியக் காரணம் அதிமுகவும், பாமகவும் தான். இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர், தான் என்று பேசியவர் நரேந்திர மோடி. அந்த வகையில், சிறுபான்மையினருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக இருக்கும் பாஜகவுடன் இணைந்துள்ளது பாமக.
திமுக சமூக நீதியை பாதுகாக்கவே, காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - விசிகவுடனான கூட்டணியை, நெருக்கடிகள் வந்தாலும் பரவாயில்லை என தொடர்ந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட, அதிமுகவினர் பாஜகவை விமர்ச்சிக்க மாட்டார்கள். திமுகவைத்தான் விமர்சனம் செய்வார்கள். தேர்தலில் கூட பாஜகவை விமர்ச்சிக்காதவர்கள் தான் அதிமுகவினர் என்பதை மக்கள் உணர வேண்டும்.
சாதி, மதங்களை தூண்டிவிட்டு இப்படியே நீங்கள் கிடங்கள் என்று சொல்லும் கட்சி தான் பாஜக. அதிமுக வீழ்த்தப்பட வேண்டிய கட்சி, பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டிய கட்சி" எனக் கூறினார். இந்த பிரச்சாரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் - திமுகவின் சதியை அம்பலப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் எல்.முருகன் பிரேத்யேக பேட்டி! - L Murugan