அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நரசிங்கம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், சுமார் ஒரு மணி அளவில் வாக்குச்சாவடி மையம் அருகே விசிக கட்சியைச் சேர்ந்த சிலர் கூட்டமாக இருந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த அருண், வாக்குச்சாவடியில் பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர், பாஜகவைச் சேர்ந்த அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில், பாஜகவைச் சேர்ந்த அருண் மற்றும் விசிகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் அஜித், செல்வராஜ் மகன் செல்வகுமார் ஆகிய மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, படுகாயமடைந்த மூன்று பேரும் ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
பின்னர், வாக்குச்சாவடி மையத்தில் போதிய போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டவுடன், வாக்குப்பதிவு ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் மீண்டும் தொடங்கியது. ஏற்கனவே, நரசிங்கம்பாளையம் வாக்குச்சாவடி மையம் பதற்றமான வாக்குச்சாவடி மையம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்ட மோதலால் சிறப்புப் பாதுகாப்புப் படை போலீசார் நரசிங்கம்பாளையம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் பாமக வேட்பாளர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியல்.. எதற்காக தெரியுமா? - Lok Sabha Election 2024