சென்னை: நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் வரிசையில், புதிதாக வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக சென்னை கடற்கரை காட்பாடி இடையே இயக்கப்படும் இந்த வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமானது இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
நாடு முழுவதும் தற்போது பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே மெட்ரோ ரயில்களையும் அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.
அப்படி, வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் நடைபெற்று வரும் நிலையில், முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் முடிந்தது. அதன்படி, சென்னை கடற்கரை முதல் காட்பாடி வரை புதிதாக உருவாக்கப்பட்ட 12 பெட்டிகளை கொண்ட வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது.
🚨 Vande Metro trail run conducted in Tamil Nadu. pic.twitter.com/E0TZCTlf0M
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 3, 2024
சென்னை டூ காட்பாடி: சென்னை வில்லிவாக்கம் ரயில் பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் இருந்து 8.15 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட்டு, அதன் பின்னர் காலை 9.30 மணிக்கு காட்பாடி நோக்கி சென்று ராயபுரம், பெரம்பூர், வில்லிவாக்கம் வழியாக காலை 11:55 மணிக்கு காட்பாடி சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில், மதியம் 12:15 மணிக்கு காட்பாடியில் புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையுள்ளது. மேலும் இந்த ரயிலை வருங்காலத்தில் 180 கி.மீ வேகத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ள தென்னக ரயில்வே, அடுத்ததாக சென்னை-திருப்பதி இடையேயும், அதை தொடர்ந்து 180 நகரங்களை இணைக்கும் வகையிலான வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
வந்தே மெட்ரோவின் வசதிகள் என்ன?: 12 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஏசி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா, அதி நவீன பசுமை கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும். 200 பேர் நிற்க கூடிய வகையிலும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் விதமாக உள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் ரயில் இயங்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்