சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவரின் பெருமையைப் போற்றும் வள்ளுவர் கோட்டம், 1973ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இது அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவால் திறக்கப்பட்டது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கருங்கற்கள் பதிக்கப்பட்டு, திருக்குறள் செதுக்கப்பட்டு உள்ளது. வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டு 48 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி வள்ளுவர் கோட்டம் சேதம் அடைந்துள்ளதாக, இது குறித்த தகவலை செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் அடிப்படையில், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ரூ.80 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கும் பணிகள் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி, வள்ளுவர் கோட்டத்தில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளது.
சுமார் 5 ஏக்கர் நிலப் பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், கல் தேர் 128 அடி உயரம் கொண்டதாகவும், 67 மீட்டர் நீலம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவுக்கூடம், விற்பனைக் கூடம், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒலி, ஒளி காட்சிக்கூடம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்படிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முழு பணியும் நிறைவடைந்துவிடும் என்பதால், ஜனவரி தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. வள்ளுவர் கோட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெப்பம் எப்போது தணியும்? - பாலச்சந்திரன் கூறிய குட் நியூஸ்! - Tamil Nadu Weather Report