திருவாரூர்: இந்த வருடம் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிறு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூரில் 24 மணி நேரத்தில் 22 சென்டி மீட்டர் அளவு பெய்த கன மழையின் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதனை அடுத்து, மாவட்டம் முழுவதும் மாவட்ட வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பில், 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டதாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டு உள்ள சம்பா நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாத காரணத்தினால், அவை பதராக மாறும் சூழல் உருவாகி உள்ளதாகவும், மேலும் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தனர். இந்த நிலையில், இன்று (ஜன.31) திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து, கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் உத்தரவு வரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ஆட்சியர் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உரிய முறையில் தெரிவிப்பதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, விவசாயிகள் கலைந்து சென்று, மீண்டும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை பாதுகாக்கும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் ஸ்மார்ட் வாட்ச் திருடிய தம்பதி; வைரலாகும் சிசிடிவி காட்சி!