திண்டுக்கல்: பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான பயிற்சி முகாம், பழனியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று (பிப்.23) பழனிக்கு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு, அவருக்கு திருக்கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு, திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியதாவது, “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராவார். தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிட்டால் தோல்வி அடைவார் என்று ஆ.ராசா விமர்சனம் செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “கட்சியைப் பொறுத்தவரையில், நாடாளுமன்றக் குழு யார் வேட்பாளர் என்று முடிவு செய்வார்கள். திமுக மன்னர் ஆட்சி, ஊழல் ராஜாக்கள் இருக்கின்ற கட்சி. திமுகவில் உள்ள பொறுப்பாளர்கள் யார் வேண்டுமானாலும் நாங்கள்தான் இந்த தொகுதியின் வேட்பாளர், எம்.பி என்று முடிவு செய்து கொள்வார்கள். ஆனால், பாஜகவில் நாடாளுமன்றக் குழு பரிந்துரைக்கும் நபர்கள்தான் வேட்பாளர்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “ஆ.ராசா ஊழல்வாதி என்று மக்களுக்கு தெரியும். நீலகிரியில் ஆ.ராசாவை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். ஒட்டுமொத்த திமுகவையும் தமிழகத்தில் மக்கள் புறக்கணிக்கத் தயாராகியுள்ளனர். தேர்தலில் கூறிய எந்த ஒரு வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்றார்கள். ஆனால் மூடவில்லை.
அவற்றிற்கு பதிலாக கிராமந்தோறும் கஞ்சா விற்பனை, மது விற்பனையாகி வருகிறது. கல்விக்கடனைப் பற்றி வாக்குறுதி கொடுத்துவிட்டு, திமுக தற்போது அமைதியாக உள்ளது. ரூ.300 இருந்த மின்சாரக் கட்டணம், தற்போது ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஊழல் திமுகவை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எரிவார்கள்” என பேசினார்.
தொடர்ந்து, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை நிதி அமைச்சரிலிருந்து மாற்றப்பட்டதற்கு, தகவல் தொழில்நுட்ப பிரிவை மேம்படுத்துவதற்காக என்று முதலமைச்சர் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை அடுத்து, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டது எல்லோருக்கும் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஐடி துறைக்கு மாற்றப்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்