தஞ்சை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தஞ்சையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வாகன பேரணி சென்றார். அப்போது பேசிய அவர், 'கச்சதீவை மட்டும் தாரை வார்க்கவில்லை. பாரம்பரிய மீன் பிடிப்பு பகுதியையும் கூட, கச்சத்தீவு கொடுக்கும் பொழுது சேர்த்து கொடுத்துவிட்டதால், இன்று வரை அந்தப் பிரச்சனை தீராமல் உள்ளது.
கச்சத்தீவு மீனவர்கள் பரம்பரை அதிகாரங்கள், சுதந்திரம் அனைத்தையும் தாரை வார்த்துக் கொடுத்தது, திமுக எனக் குற்றம்சாட்டினார். சமீபத்தில் திமுக கட்சி அமைச்சராக இருந்தவர், 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து இருக்கிறார்கள். அந்த குடும்பம் அந்த பணத்தை எங்கு வைப்பது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்ப உறுப்பினர்களில் அமைச்சராக இருந்த ஒருத்தர் சொன்னார்.
அதைப் பற்றி கேள்வி கேட்டபோது, பதிலே கொடுக்கவில்லை திமுக எனக் குற்றம்சாட்டினார். மேலும், சாராயம் தண்ணீர் மாதிரி கொட்டுகிறது. காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. சாராயம் மூலம் பல குடும்பங்கள் கெட்டுப்போய் இருக்கிறது என்பது நமது எல்லோருக்கும் தெரியும். குழாயை திறந்துவிட்டால், தண்ணீர் எப்படி வருமோ? அதுபோல, இந்த சாராயம் கொட்டுகிறது.போதை பொருட்களை டன் டன்னாக கொட்டுகிறார்கள்.
போதை பொருட்கள் விற்ற ஆதாயத்தில் இருந்து அந்த குடும்பத்தில் உள்ள ஒருத்தரை வைத்து சினிமா தயாரித்தார்கள் என்பது நமக்கு தெரியவருகிறது என்றும் கோபாலபுரம் குடும்பத்திற்கும் போதை பொருள் விற்பனை செய்தவருக்கும் சம்பந்தம் உண்டா? இல்லையா? என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் எனக் கூறினார். போதைப்பொருள் விஷயத்தில், உதயநிதி ஏன் மௌனம் காத்து வருகிறார் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், போதைப்பொருள் மூலமாக திமுகவிற்கு வந்த செருக்கு ஓட்டு மூலமாக நொறுக்கு எனத் தெரிவித்தார்.
திமுக என்றால் திராவிட முன்னேற்ற கழகம் என சொல்லுகிறோம். ஆனால், அது (Drug) ட்ரக் முன்னேற்ற கழகம் எனக் குற்றம்சாட்டினார். இந்தப் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், பாஜக மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஊழல் யூனிவர்சிட்டிக்கு வேந்தர் மோடி; எடப்பாடி சிம்பிளி வேஸ்ட்' - மு.க.ஸ்டாலின் விளாசல் - Lok Sabha Election 2024