வத்தலகுண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூபாய் ரூ. 82,900 கைப்பற்றப்பட்டது.
வத்தலகுண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு பொதுமக்களிடம் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் ரூபாய் 82,900 கணக்கில் வராத பணம் இருப்பதைக் கண்டு அதனை கைப்பற்றினர்.
இது தொடர்பாக சார்பதிவாளர் துரைசாமி மற்றும் ஊழியர்களிடம் நள்ளிரவு வரை தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெருங்களத்தூர் செல்லாமல் வண்டலூர் செல்வது எப்படி? தீபாவளிக்கு சொந்த வாகனங்களில் செல்வோர் கவனத்திற்கு!
ஏற்கனவே திண்டுக்கல் மாநகராட்சியில் 2023 ஜூனிலிருந்து மக்கள் வரியாக செலுத்திய ரூ 4.66 கோடியை வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்கள் தயாரித்து கையாடல் செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தில் கண்காணிப்பாளர் சாந்தி, சரவணன், இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், மாநகராட்சி வரிப்பணம் கையாடல் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.
போலீஸ் விசாரணையில், சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது, திண்டுக்கல் பேருந்து நிலைய பகுதியில் இ சேவை மையம் நடத்தி வந்த வேதாந்திரி நகரைச் சேர்ந்த ரமேஷ் ராஜா என தெரிந்தது. அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வத்தலகுண்டு பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்