சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த 14ஆம் தேதியிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
திருநின்றவூர் ஈஷா ஏரி 835 ஏக்கர் கொண்டது. ஏரி ஆழப்படுத்தாமல் உள்ளதால் சாதாரண மழைக்கு தண்ணீர் தேங்கும் நிலை இருந்துள்ளது. கடந்த மழை பாதிப்பின் போது மாவட்ட ஆட்சியர், ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை சீரமைத்து, மோட்டார் வைத்து நீர் வெளியேற்றிதால் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்துள்ளது. இந்நிலையில், ஈஷா ஏரியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோருடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். மழைநீர் வரத்து பகுதிகளில் தண்ணீர் தடையின்றி வரும் வகையிலும், வெளிப்போக்கி பகுதி மற்றும் கால்வாய்களில் நீர் செல்லும் வகையிலும் தொடர்ந்து கண்காணித்து சீரமைப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு நீர்வளத்துறை அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிப்பகுதியில் இருந்து வெளியேறுகின்ற மழை நீர், திருநின்றவூர் ஏரியை முறையாகச் சென்றடையும் வகையில், அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டு நீர் வழிப்பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். மேலும், அங்கே பிரதானப்… pic.twitter.com/bk5z1FCYXX
— Udhay (@Udhaystalin) October 16, 2024
இதனைத் தொடர்ந்து, திருநின்றவூர் தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால நிவாரண முகாமில் சுகாதார வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார். மேலும், நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு போர்வை, பால், ரொட்டி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார்.
இதையும் படிங்க: 'ரெட் அலர்ட்' வாபஸ்.. இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிப்பு
தொடர்ந்து, நிவாரண முகாமில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் மருந்து பொருட்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து, பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக முகாம்களில் தங்கவைத்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். கடந்த வருடமும் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இந்த ஆண்டும் அதிக கனமழை காரணமாக அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மழை குறைந்ததும், ஓரிரு நாட்களில் மழை வெள்ளம் வடிய துவங்கும். இதற்கு முதலமைச்சரிடம் பேசி நிரந்தர தீர்வு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரியிலிருந்து 40 அடி மழை நீர் வடிகால் காமராஜர் நகர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக பருத்திப்பட்டு ஏரிக்கு செல்கிறது. அந்த வடிகால் ஆக்கிரமிப்புகளால் தற்போது 5 அடியாக சுருங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீருடன் கழிவு நீரும் கலந்து அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
இதனால், அப்பகுதி முழுவதும் கழிவு நீர் தேங்கி சின்ன கூவம் போல் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், கனமழை காரணமாக ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரி நீர் வேளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளியேறி வரும் உபரிநீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள், இளைஞர்கள் வலைகள் விரித்து மீன் பிடித்தும், கண்மாய் பகுதியில் குளித்தும் ஆர்வமாக விளையாடியும் வந்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், ஆபத்தான முறையில் குளித்து விளையாடிய சிறுவர்களை எச்சரித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்