சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில், டென்னிஸ் விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜ் பெயரிலான பார்வையாளர் மாடத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எழிலன், மயிலை த.வேலு, ஆர்.டி.சேகர், பிரபாகர் ராஜா ஜெ.கருணாநிதி, ஐ ட்ரிம்ஸ் மூர்த்தி, பரந்தாமன், சென்னை துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
In a fitting tribute to the remarkable achievements of our tennis legend Thiru #VijayAmritraj, the Government of Tamil Nadu, under the visionary leadership of our Honourable Chief Minister @mkstalin, has named and inaugurated the 'Vijay Amritraj Pavilion' at the SDAT’s Chennai… pic.twitter.com/cc5qVfwFxn
— Udhay (@Udhaystalin) October 1, 2024
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்திய டென்னிஸ் உலகின் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த விஜய் அமிர்தராஜ் பெயரை வைத்துள்ளது மகிழ்ச்சி. சாதனையாளர்களை என்றுமே திராவிட மாடல் அரசு கொண்டாட தவறியதில்லை. அவருடைய சாதனையை எடுத்துச் சொல்லும் வகையில் பார்வையாளர் மாடத்திற்கு அவரது பெயர் வைத்ததில் பெருமை கொள்கிறோம். இன்று டென்னிஸ் நிறையை பேர் விளையாடுகிறார்கள், தொலைக்காட்சியில் காண்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் விஜய் அமிர்தராஜ் தான். அவர் அர்ஜுனா விருது மற்றும் பத்ம விருதினையும் பெற்றுள்ளார்.
விளையாட்டு வீரராக மட்டுமல்ல, ஆகச்சிறந்த மனிதராக அவரைக் கொண்டாட வேண்டும். டென்னிஸ் விளையாட்டினை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா, சைக்கிளத்தான், பார்முலா 4 கார் பந்தயம் என பல்வேறு சிறப்பான போட்டிகளை நடத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், "துணை முதலமைச்சருக்கு என்னுடைய வாழ்த்துகள், விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. விளையாட்டுத் துறையில் சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளீர்கள். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றால் நான் பெருமையாகச் சொல்வேன், இந்தியாவின் சிறந்த நகரான சென்னையிலிருந்து என்று. மேலும், எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் பெற்றோரை நினைத்துப் பார்க்கிறேன்" என உணர்ச்சிவசமாக பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்