வேலூர்: புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது போதுமானதாக இருக்காது தான். ஆனால், இதுவே பெரிய விஷயம் ஆச்சே என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிச.7) மாலை நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதாவது சுகாதாரம், மகளிர் திட்டம் சிறப்பு திட்டங்கள், செயலாக்கம் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி: கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருப்பது போதுமானதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக முதலமைச்சர் ரூ.2 ஆயிரம் கோடி கேட்டிருந்தார். ஆனால், மத்திய அரசு ரூ.944 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது போதுமானதாக இருக்காது. ஆனால், இதுவே பெரிய விஷயம்" என்றார்.
தமிழக விளையாட்டுத்துறை தொடர்பான கேள்விக்கு, "தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டுக்காகவே பல விருதுகளைப் பெற்று வருகிறோம். மாவட்டந்தோறும் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான உபகரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தமிழக விளையாட்டு வீரர்கள் விருதுகளை வாங்கியுள்ளனர். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஃபிக்கி அமைப்பு, தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு
விருது வழங்கி கௌரவித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், துணை முதலமைச்சர் ஆய்வு தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 6 அன்று வேலூர் மாநகராட்சி பாதாளச் சாக்கடை 2ம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் நிறுவப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், சோதனையோட்டம் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: "உடுத்திருக்கும் உடையைத் தவிர வேறு ஏதும் இல்லை" வெள்ளம் வடிந்த பின்னும் வடியாத கண்ணீர்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பாதாளச் சாக்கடை திட்டம் குறித்தும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனையோட்ட பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை துணைச்செயலாளர் மு.பிரதாப் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.