நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். முக்கிய குற்றவாளியாக கூறப்படும் வாளையார் மனோஜ் மட்டும் நேரில் ஆஜராகினார்.
இந்த வழக்கில் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட வேண்டும் என எதிர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் மனுத் தாக்கல் செய்தார். இது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் வருகிற பிப்ரவரி 23 அன்று பதிலளிக்கவும், அதே தேதியில் வழக்கை ஒத்திவைத்து நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கு சம்பந்தமாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், வழக்கு சம்பந்தமாக இரு வேறு இடங்களில் இருந்து தொலைத்தொடர்பு ஆய்வறிக்கை கிடைக்கவில்லை என்றும், அறிக்கை வந்தவுடன் சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட் - உயர் கல்வித்துறை நடவடிக்கை!