சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெல்த் வாக் (Health Walk) நடைப்பயிற்சி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரியுடன் அமைச்சர் மா சுப்ரமணியன் இணைந்து ஜாலியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் வந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் தமிழ்நாட்டிற்கும் வருகை புரிந்துள்ளார். தற்போது தொழில்துறை முதலீடுகள் குறித்து நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெல்த் வாக் 8 கி.மீ நடைப்பயிற்சி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இணைந்து அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி மற்றும் அவருடைய சகாக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். பின்னர், பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த டீக்கடையில் அமர்ந்து கருப்பட்டி காப்பியும், தொடர்ந்து இளநீர் அருந்தியும் மகிழ்ந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய அரபு அமீரக அமைச்சர், " வர்த்தக மேம்பாட்டு பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்துள்ளேன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறந்த ஓட்டப்பந்தய வீரர். அவருடன் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளேன். நடைப்பயிற்சியும் சிறந்தது" என்று அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி திங்கள்கிழமை தமிழ்நாடு வந்தடைந்தார். மேலும், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு, அதன் பின்னர் கேரளாவிற்குச் செல்ல உள்ளார். அவருடன் 50க்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்களும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளும் வந்துள்ளனர்.
தொழில் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு அவர் வருகை புரிந்துள்ளார். முதலமைச்சரின் அறிவுரை அடிப்படையில் ஹெல்த் வாக் திட்டம் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்தோம்.
தமிழ்நாடு முதலமைச்சரை, அமைச்சர் அப்துல்லா நேற்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் சந்தித்து தொழில் துறைகள் மற்றும் தொழில்சார்ந்த ஒப்பந்தங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் நண்பர்களுடன் அதிகாலையில் நடைப்பயிற்சி மற்றும் ஓட்ட பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று பெசன்ட் நகர் பகுதியிலிருந்து கடற்கரை வரை நடைப்பயிற்சி மேற்கொண்டோம்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "ஐக்கிய அரபு அமீரகத்தி்ன் உயர்நிலை குழுவுடன், தொழில்துறையை மேம்படுத்துவது குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது. அதன் பின்னர் எவ்வளவு முதலீடுகள் வரும் என்பது தெரியும்" என்று அமைச்சர் ராஜா கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்