தூத்துக்குடி: கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவரின் தாயார் காளியம்மாள் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஸ்ரீராம் நகரில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மொத்த ஆட்டில் 2 ஆடுகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. பின்னர் இதுதொடர்பாக ராஜபாண்டி, கோவில்பட்டி மேற்கு காவல்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையின் போது கோவில்பட்டி பகுதியில் இதுபோன்று அடிக்கடி ஆடுகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(31), செல்லதுரை(35) ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து இருசக்கர வாகனத்தில் ஆட்டை தூக்கிச் சென்றது தெரியவந்துள்ளது. அதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், மது அருந்துவதற்கு பணம் தேவைப்பட்டதால், ஆடுகளைத் திருடி விற்றதும், இதுபோன்று 50க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்து கைது செய்த போலீசார், இருவர் மீதும் IPC Sec 379 கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, ஆட்டை இழுத்துச் சென்று பைக்கில் ஏற்றிச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மருமகள் திட்டியதால் மூதாட்டி தற்கொலை.. தலைநகரை அலறவிட்ட குற்றச் செய்திகள்!