தேனி: சின்னமனூர் அருகே சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் பலியான நிலையில், ஒருவர் சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் தீனா(24) மற்றும் திவாகர்(19). இவர்கள் இருவரும் நேற்று (ஆக.17) இரவு இருசக்கர வாகனத்தில் கம்பத்திலிருந்து சின்னமனூர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது உத்தமபாளையம் புதிய புறவழிச்சாலை பகுதியில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த அகமது மீரான்(45) என்பவர் வந்து கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் மூவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர். அதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த நபர்கள் உடனடியாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த உத்தமபாளையம் போலீசார், காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மூவருக்கும் பலத்த காயம் என்பதால், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு இருவரையும், திவாகர் என்ற இளைஞரை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தீனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கிடையே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திவாகரும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்த அகமது மீரான் என்பவரை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் போலீசார், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வாகன விபத்தில் சிக்கிய மூவரில் இருவர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள நபரும் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு நினைவு வந்தால் தான் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதா? அல்லது விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்துத் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்து ஏற்பட்ட பகுதியில் ஏதேனும் சிசிடிவி காட்சிகள் உள்ளதாக எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்