சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு பிரிவின் டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஐபிஎஸ் அதிகாரியான திருநாவுக்கரசு. இவர் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில்,"என்னுடைய பெயரையும் படத்தையும் பயன்படுத்தி சிலர் போலியாக ஃபேஸ்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கி உள்ளனர். பின்னர் தன்னுடைய ஒரிஜினல் ஃபேஸ்புக் ஐ.டியிலிருக்கும் நண்பர்களை, ரேண்டமாக தேர்வு செய்து அவர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக மதுரையில் வசிக்கும் என்னுடைய நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு மோசடி நபர் பணம் பறிக்க முயன்றுள்ளார். மேலும் அந்த மோசடி நபர் என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து, சிஆர்பிஎஃப் முகாமில் உள்ள எனது நண்பர் சந்தோஷ் குமார் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால், அவர் தன்னுடைய வீட்டில் உள்ள பர்னிச்சர் பொருட்களை விற்க விரும்புவதாகவும், எனவே பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தருமாறும் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
இதையடுத்து எனது மதுரை நண்பர் உஷாராகி இந்தத் தகவலை என்னிடம் தெரிவித்தார். எனவே என்னுடைய பெயரில் யாராவது பணம் கேட்டால் அனுப்ப வேண்டாம். அதோடு மோசடி நபரால் உருவாக்கப்பட்ட போலி ஃபேஸ்புக் ஐடியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோசடியில் ஈட்டுப்பட்ட நபர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரிந்தது.
இதனை தொடர்ந்து ராஜஸ்தான் விரைந்த தனிப்படை போலீசார், அங்கேயே முகாமிட்டு 2 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹனீப் கான் (31), வஷித் கான் (24) எனது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் கஞ்சா: சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், சந்தேகத்துக்குரிய வகையிலிருந்துள்ளார். இதனைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர் சோதனை செய்து பார்த்த போது, 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் இது குறித்து பழவந்தாங்கல் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் போலீசார் பள்ளிக்குச் சென்று மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்வதும் அவரிடம் இருந்து வாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோரை வரவழைத்த போலீசார், மாணவனுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் மாணவருக்கு கஞ்சா விற்பனை செய்த நபரை தேடி வருகின்றனர். சென்னை நகர்ப் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி மாணவன் ஒருவர் பள்ளிக்குக் கஞ்சா கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது.. போலீசாரிடம் கூறிய பகீர் காரணம்?