புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாதாளச் சாக்கடை கழிவுநீரில் இருந்து விஷவாயு தாக்கியதில், அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செந்தாமரை (80), காமாட்சி (55) மற்றும் மாணவி செல்வராணி (15) ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
மேலும், பாலகிருஷ்ணன் (70) மற்றும் பாக்கியலட்சுமி (30) ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேற்று அதே பகுதியில் புஷ்பராணி (38), பூமகள் (52), சுலோச்னா (60), மாரி செல்வம் (69) ஆகிய 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் 4-வது தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்லும் பாதாளச் சாக்கடை பைப் லைன் புதியதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பாதிப்பு ஏற்பட்ட நான்காவது குறுக்குத் தெரு உட்பட ஆறு தெருக்களில் உள்ள வீடுகளில் கழிவறையைப் பயன்படுத்த நகராட்சி தடை விதித்து, நடமாடும் கழிவறை அமைத்துள்ளது.
குறிப்பாக, நான்காவது குறுக்குத் தெருவில் உள்ள அனைத்து வீடுகளின் கழிவறையில் இருந்து தொட்டிக்குச் செல்லும் பைப்லைன்களை புதிதாக மாற்றித் தருவதுடன் சோக்பிட் மற்றும் எஸ் வடிவிலான பாதுகாப்பினை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வீடுகளிலும் உள்ள கழிவு நீர் வாய்க்கால் வழிகளை உடைத்து எடுத்து தீவிர நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் இறங்கி உள்ளனர். 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது புதுச்சேரி அரசின் முழுச் செலவிலேயே இந்த வீடுகளுக்கு பைப் மாற்றும் நடவடிக்கையை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதுவரை மக்கள் தங்களின் வீடுகளில் சமையல் செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். ஆகையால், அவர்களுக்கு அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, பாதிப்பு ஏற்பட்ட நான்காவது குறுக்கு தெருவில் அனைத்து பணிகளும் முடிவு பெற்று, பின்னர் பொதுமக்கள் கழிவறையைப் பயன்படுத்தலாம் என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா (30), மங்கையர்கரசி (40) என்ற இரண்டு பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இப்பகுதியில் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அந்த தெருவில் வசிக்கும் மக்கள் அருகே உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 17ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குவைத் தீ விபத்து: கொச்சி வரும் 7 தமிழர்கள் உடல்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?