தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு முத்துகவுண்டர் தெருவைச் சேர்ந்த விவசாயி முதியவர் பழனி (65), இவர் எர்ரணஹள்ளி ஊராட்சி சாமியார் நகர் கிராமப் பகுதியில் மூன்று ஏக்கர் விவசாய தோட்டத்தில், தக்காளி, நிலக்கடலை பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில், காட்டு பன்றிகளை விரட்ட நேற்றிரவு (செப்.23) தோட்டத்தில் காவலில் ஈடுபட்டிருந்தார். இரவு அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு ஆண் யானை முதியவரை கண்டதும் ஆக்ரோஷமாக அவரை தந்தத்தால் குத்தி, மிதித்துக் கொன்றுள்ளது. இதையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
ஆனால், சமீபத்தில் செங்கோடப்பட்டி அருகே உள்ள தீத்தாரப்பட்டியில் முதியவரை இதே ஒற்றை யானை மிதித்துக் கொன்ற நிலையில், மீண்டும் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவசாயிகளை கொன்றுள்ளது. யானை நடமாட்டம் இருப்பது தெரிந்தும் வனத்துறையினர் எவ்வித முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாடியுள்ளனர்.
இதையும் படிங்க: கால்நூற்றாண்டு துயர வாழ்க்கைக்கு தீர்வு.. காலியாகிறது கண்ணப்பர் திடல்!
மேலும், யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்றும் யானையால் தினம், தினம், தாங்கள் அச்சத்துடனே வாழ்வதாகவும், விளைநிலங்களில் பயிரிடப்படும் நிலக்கடலை, கரும்பு, நெல், தக்காளி, வாழை, உள்ளிட்ட எந்த விளைப்பொருளையும் பாதுகாக்க முடியவில்லை என கூறி வனத்துறையின் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு காவல் துறையினர் தொடர்ந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.