கடலூர்: கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணி குப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் பேரன் ஆகிய 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீஸ் விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், கொலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான சுதன் குமார், ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 15 நாட்கள் அலுவலகத்திலும், 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 15ஆம் தேதி நெல்லிக்குப்பத்தில் உள்ள வீட்டில் சுதன் குமார், தாய் கமலேஸ்வரி மற்றும் மகன் நிஷாந்த் மூவரும் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இதனிடையே, சுதன் குமார் விவாகரத்துக்குப் பிறகு அஞ்சுதம் சுல்தானா என்ற பெண்ணுடன் 'லிவிங் டு கெதர்' உறவு முறையில் இருந்து வந்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட சிறுவன், அஞ்சுதம் சுல்தானாவிற்கும் சுதன் குமாருக்கும் பிறந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அஞ்சுதம் சுல்தானாவிடம் டிஎஸ்பி பழனி தலைமையில் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. அதன் பின்னர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நேற்றிலிருந்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே தெருவைச் சேர்ந்த ஒரு இளைஞரின் செல்போன் சம்பவம் நடந்த நாள் முதல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அந்த இளைஞரை இன்று (வியாழக்கிழமை) தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அப்போது, அவரது ஒரு கைவிரல் துண்டிக்கப்பட்ட நிலையில் பிடிபட்டதாகவும், மேலும் கொலை செய்யும்போது அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் பிடிபட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது இவர்கள் இரண்டு பேர்தான் என போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், கொலையின் காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எனது கணவரின் உயிருக்கு ஆபத்து.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அருளின் மனைவி பரபரப்பு புகார்!