சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஷாத் ஆலம், அஸ்ரபிக் குமார் மாஜி, அமர் குமார் மாஜி, முகம்மது மன்சூரி மற்றும் முந்தன் குமார் ஆகிய ஐந்து பேர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பவர் பிளாண்ட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் விடுமுறைக்காக பீகார் மாநிலம் சென்ற நிலையில், விடுமுறை முடிந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலைய வடக்கு வாசலுக்கு ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளனர். அப்போது நவ்சாந்த் ஆலம், முந்தன்குமார் ஆகிய இருவரும் உணவு சாப்பிட ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். எனவே, மற்ற மூன்று பேரும் ரயில் நிலைய வாசலில் நின்று கொண்டிருந்துள்ளனர்.
இவ்வாறு உணவருந்தச் சென்ற இருவரும் திரும்பி வந்து பார்த்தபோது மற்ற மூன்று பேரை காணவில்லை. இதனையடுத்து, இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது, அமர் குமார் மாஜி, அஷ்ரபிக் குமார் மாஜி மற்றும் முகமது மன்சூரி ஆகியோரை ஒரு ஆட்டோவில் கத்தியை காட்டி மிரட்டி ஏற்றிச் செல்வது தெரிய வந்துள்ளது. பின்னர், அவர்களது உறவினர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு 30 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், பணம் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
மேலும், ஒரு அக்கவுண்ட் நம்பரை கொடுத்து அந்த எண்ணிற்கு பணம் அனுப்பச் சொல்லி 15 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். இதனையடுத்து, வட மாநிலத் தொழிலாளர்களிடமிருந்து ஒரு செல்போனையும் பறித்துக் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, மூன்று பேரும் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் நின்ற ஒரு நபரிடம் நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறி, அவரது செல்போனில் இருந்து நவ்ஷாத் ஆலத்துக்கு போன் செய்துள்ளனர். இதையடுத்து எழும்பூர் போலீசாரும், நவ்ஷாத் ஆலமும் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேரிடமும் ஆட்டோ ஓட்டுநரின் அடையாளங்கள், ஆட்டோ பதிவு எண் உள்ளிட்டவற்றை போலீசார் கேட்டறிந்துள்ளனர். இதனையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மணலியைச் சேர்ந்த முருகன் (30) மற்றும் அயனாவரத்தைச் சேர்ந்த குரு (22) ஆகிய இருவரையும் அம்பத்தூரில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முருகன் மீது மணலி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்.. பிரியாணி கடை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!