சென்னை: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில், தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனியா(33) என்பவர் மாங்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
அதில், தன்னுடைய மாமா மோகன் புஜக்கர் (38) தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார் என காவல் நிலையத்திற்குத் தெரிவித்துள்ளார். இந்த தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த மாங்காடு ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில், மோகன் புஜக்கர் தற்கொலை செய்ய வில்லை எனவும், அவரை வேறு ஒருவர் கத்தியால் குத்தி உள்ளார் என அறிக்கையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தீவிரமாகச் சோனியா மற்றும் சுசாந்தாபர்மன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், சோனியா மற்றும் சுசாந்தாபர்மன் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுத் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சோனியாவைப் பார்ப்பதற்காக அடிக்கடி சுசாந்தாபர்மன் வீட்டிற்கு வந்ததால் மோகன் புஜக்கர் கண்டித்துள்ளார்.
மேலும், சம்பவத்தன்று சுசாந்தா பர்மன் வீட்டிற்கு வந்து சோனியாவிற்கு வளையல் அணிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைப்பார்த்த மோகன் புஜக்கர் சுசாந்தா பர்மனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுசாந்தாபர்மன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன் புஜக்கரின் மார்பில் குத்தி கொலை செய்துள்ளார்.
இதில், சம்பவ இடத்தில் மோகன் புஜக்கர் உயிரிழந்துள்ளார். போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மோகன் புஜக்கர் தனக்குத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார் என சோனியா கூறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சோனியா மற்றும் சுசாந்தா பர்மன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவை: ரயில் தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை! - Suicide In Coimbatore