சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தற்போதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அதேபோல, இந்த சம்பவத்திற்கு தங்களது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
— TVK Vijay (@tvkvijayhq) July 6, 2024
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்…
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு இரங்கல் தெரித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளதாவது, "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது.. ஆணையர் அஸ்ரா கார்க் தகவல்!