சேலம்: சேலத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் விழா இன்று (ஜனவரி 20) நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன் கலந்து கொண்டு, புதியதாகக் கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் கூறுகையில், "தமிழக அரசு உடனடியாக சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் , ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிடவில்லை என்றால், வரும் பிப்ரவரி 28ஆம் தேதி கடலூரில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பிரமாண்ட மாநாடு நடத்தப்படும்.
தமிழகத்தில் கடைக் கோடி மக்களிடமும் அறிமுகமாக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி , விஜயகாந்த், சங்கரைய்யா போன்ற தலைவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுக் காலமானார்கள். தமிழ்நாட்டில் சாதி மத எல்லைக்குள் அப்பாற்பட்டு இருந்தவர்களை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குத்தான் அரசியல் தலைவர்கள் உள்ளனர்.
அந்த இடத்தில் வேல்முருகனும் உள்ளார். வேல்முருகன் இன்னும் பத்து ஆண்டுக் காலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவாகுவார். தமிழகத்தில் 118 சட்டமன்றத் தொகுதிகளில் கட்சிகளால் தனித்து நின்று வெற்றி பெற முடியாது. ஆகவே, எங்களைப் போன்ற கட்சிகளின் ஆதரவோடு தான் இவர்கள் ஆட்சி அமைக்கின்ற சூழல் உருவாகும்.
ஜெயலலிதா என்பவர் ஆளுமை மிக்க தலைவராக இருந்தார். அவரால் தனித்து நின்று வெற்றி பெற முடியும். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு அது சாத்தியமில்லை. எடப்பாடி பழனிசாமி ஒன்றும் மிகப்பெரிய அரசியல் ஆளுமை படைத்த தலைவர் இல்லை. அதிமுக தற்பொழுது 4 அணியாகப் பிரிந்துள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்பது இனிவரும் காலங்களில் கடினம்.
எங்களைப் போன்ற கட்சிகளைக் கூட்டணிக்கு வைத்துக் கொண்டால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும். ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி அவர்களால் 118 தொகுதியைப் பிடிக்கின்ற அளவிற்கு அவருடைய வளர்ச்சியும் இல்லை. ஆகவே, எங்களைப் போன்ற கட்சிகளைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டால் மட்டுமே அவர்களின் ஆட்சி கனவு நிறைவேறும்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் தமிழகத்தில் அதிக இடங்களை வென்று விடக்கூடாது என்பது என்னுடைய முதல் நோக்கமாக உள்ளது. அதனைக் கொள்கையாகக் கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "குப்பைக்குள் கண்ணாடிகளை போடாதீர்கள்" - தூய்மைப் பணியாளர்கள் பற்றி யோசிங்க..! - சென்னை மாநகராட்சி ஆணையர்