சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான தேனி தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளராக அறிவித்தது. அதிமுக சார்பில் வி.டி நாராயணசாமி என்பவரும், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகின்றனர்.
பாஜக கூட்டணியில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிடிவி தினகரன், வரும் 24ஆம் தேதி தேனியில் இருந்து தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
இந்நிலையில், வரும் 24ஆம் தேதி விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக வேட்பாளரை ஆதரித்து தேனியில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கின்றனர். இதற்காக கம்பம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறுவதற்கு வந்தார்.
இதனால் வரும் 24ஆம் தேதி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேனி மக்களவைத் தொகுதியில் ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், வரும் 25ஆம் தேதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், 26ஆம் தேதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, 27ஆம் தேதி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் (இன்னும் இறுதி செய்யப்படவில்லை) தேனி மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு? - வெளியில் இருந்து ஆதரவா? - OPS Seat Sharing