சென்னை: நுங்கம்பாக்கத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக பாரில் ஏற்பட்ட தகராறு காரணமாக, தற்போது பழக்கடை வியாபாரி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி மகன் உட்பட 3 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், கேகே நகரைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர், சைதாப்பேட்டையில் பழங்கள் மொத்தவிற்பனை கடை வைத்துள்ளார். இவர், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக தேனாம்பேட்டை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் உள்ள பாருக்குச் சென்றுள்ளார்.
அங்கு மது அருந்திய அவர், ஷூ லேஸ் கட்டிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த செல்வா (எ) செல்வ பாரதி என்பவர், “எவ்வளவு தைரியம் இருந்தால் என்னுடைய டேபிளில் கால் வைப்பாய்?” என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கிமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த காவலாளிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் விஜய் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அருண், அருண்காந்தி ஆகிய இருவர், “நீதானே பாரில் செல்வாவிடம் பிரச்னை செய்தாய்” என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனையடுத்து, விஜய் அங்கிருந்து புறப்பட்டு, அண்ணாசாலையில் உள்ள வேறொரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். ஆனால், விஜயை பின்தொடர்ந்த அருண் மற்றும் அவரது நண்பர்கள், அண்ணா சாலை ஜிபி ரோடு பேருந்து நிறுத்தம் அருகில் விஜயை மடக்கி தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியுள்ளனர். இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விஜய் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வியாபாரியை தாக்கிய சம்பவத்தில், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) மகன் செல்வ பாரதி (26), பாளையங்கோட்டையைச் சேர்ந்த மென்பொறியாளர் அருண் காந்தி (25), சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் (27) ஆகிய மூன்று பேரையும் இன்று கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது..9 இருசக்கர வாகனம் பறிமுதல்: சென்னையில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், பேசின் பிரிட்ஜ், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருடு போவதாக புகார் வந்துள்ளது. புகாரின் பேரில், போலீசார் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று பெசன்ட் நகரில் இருசக்கர வாகனம் திருடு போனதாக போலீசாருக்கு மீண்டும் புகார் வந்துள்ளது. உடனே போலீசார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரின் புகைப்படத்தைக் கண்டுபிடித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி விட்டு ரயிலில் சென்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், அந்த இளைஞரைப் பிடித்து, அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், அது திருட்டு வாகனம் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் பொன்னேரியைச் சேர்ந்த சதீஷ் (26) என்பதும், இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வந்ததும், குடும்பச் சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர், போலீசார் சதீஷ் அளித்த தகவலின் அடிப்படையில், பொன்னேரி பகுதியில் அவர் பதுக்கி வைத்திருந்த 9 திருட்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மூதாட்டியை கொலை செய்து 8 சவரன் நகை கொள்ளை..இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை: மயிலாப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து 8 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனையில், மயிலாப்பூர் சோலைப்பன் தெருவைச் சேர்ந்தவர் செண்பகம் (75), இவர் தனியாக வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்கு அவரது தங்கை ரங்கநாயகி வந்துள்ளார். அப்பொழுது அவர் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, செண்பகத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் செயின் மற்றும் 3 சவரன் வளையல் காணாமல் போனதால், இதுகுறித்து அவரது தங்கை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, சிசிடிவி காட்சியில் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மூதாட்டி வீட்டருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, வீட்டிற்குள் சென்று வந்தது பதிவாகி இருந்தது. இதனையடுத்து, போலீசார் இருசக்கர வாகன எண்ணை வைத்து, நேற்று ராயப்பேட்டை உசேன் கான் தெருவைச் சேர்ந்த அசார் உசேன் என்ற நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு, அவரது வீட்டிற்கு சென்று கழுத்தை நெரித்து, அவர் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகையைத் திருடி அடகுக் கடையில் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செண்பகம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, மயிலாப்பூர் போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து அசார் உசேனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அசார் அடகு வைத்த நகைகளை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்க மறுப்பது ஏன்?" - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!