தேனி: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் மிகவும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "மோடி ஆட்சியில் 108 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நடுத்தர மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்குரிய கேஸ் விளையும் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர், வியாபாரிகள் ஜிஎஸ்டி வரியினால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்ததெல்லாம் மோடி கவலைப்படுவதில்லை.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன் ரத்து செய்யப்படும். மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும். மேலும், தமிழ்நாட்டில் நடக்கும் ஸ்டாலின் ஆட்சி, ஏழைகளுக்காக நடக்கின்றது. ஆனால், டெல்லியில் நடக்கும் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்காக நடக்கின்றது.
பாஜக இயற்றிய பாதகமான சட்டங்களுக்கு எல்லாம் ஆதரவு தெரிவித்த கட்சி அதிமுக. தமிழ்நாட்டில் புயல், வெள்ளம் வந்தபோது வராத மோடி இன்று உங்கள் வாக்குக்காக 10 முறை தமிழகம் வருகிறார். மும்பையில் 27 மாடி வீடு கட்டியுள்ள அம்பானியும், சாதாரண பல கடை வியாபாரியும் ஒன்றுதான். அவர்கள் இருவரும் ஒரே வரிசையில் நின்று தான் வாக்கு செலுத்த வேண்டும்.
உங்கள் வாக்கு, இந்திய ஜனநாயகத்தை உருவாக்குகின்ற வாக்கு. எனவே, உங்கள் வலிமை மிக்க வாக்குகளை நியாயமான முறையில் பயமின்றி செலுத்துங்கள். உங்கள் நலனின் அக்கறையுடன் செயல்படும் ஸ்டாலினுக்கு வாக்களியுங்கள். நம்மை மதிக்காமல், தேர்தலுக்கு மட்டுமே தேடி வரும் பாரதிய ஜனதா கட்சியைப் புறக்கணியுங்கள்" என்று பேசினார்.
இதையும் படிங்க: ஐடி ரெய்டு எல்லாம் விசிக பயணத்தை தடை செய்ய முடியாது: திருமாவளவன் விளக்கம்!