திருச்சிராப்பள்ளி: திருச்சி லால்குடி அருகேயுள்ள அன்பில் மங்கமாள்புரம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்களின் குடும்ப நபர்களுள் யாரேனும் மரணம் அடைந்தால் அந்த குடும்பத்தினருக்கு பயன்பெறும் வகையில் ’இலவச சேவை தொடக்க விழா’ நேற்று (நவம்பர் 20) நடைபெற்றது.
இந்த விழா அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா அருண்காந்தி தலைமையில் நடைபேற்ற நிலையில், இதில் இறுதி சடங்கிற்கு தேவையான இறுதி ஊர்வல வாகனம், குளிர்சாதன பெட்டி, நாற்காலிகள், பந்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவி சொந்த செலவில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா அருண்காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மங்கம்மாள்புரம் ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவச சேவையாக இறுதி ஊர்வலத்திற்கு தேவையான சொர்க்கரதம், சாமியான பந்தல், ஃப்ரீசர் பாக்ஸ் உள்ளிட்டவர்களை வழங்குகிறோம்.
இறப்பு என்பது இயற்கையாக திடீரென்று நடக்கும் ஒரு நிகழ்வு. தனது குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அந்த குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் துக்கம் தலைக்கு மேல் இருக்கும். அந்த துக்க வீட்டில் பணம் தேவை அதிகமாக இருக்கும். கடனை வாங்கியாவது இறுதிச் சடங்கு சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என அவர்கள் நினைப்பதுண்டு.
இதையும் படிங்க: "சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா?" பல்டி அடித்த செல்வப்பெருந்தகை அறிக்கை!
அதனால் அந்த குடும்பத்தில் ஒருவராக இருந்து இதனை செயல்படுத்த வேண்டும் என நினைத்து இந்த சேவையை தொடங்கியுள்ளோம். இந்த சேவை என்பது எனது பதவி காலம் இருக்கும் வரை மட்டுமல்லாமல் எனது இறுதி காலம் வரை தொடரும்.
துக்க வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அங்கிருக்கும் சூழ்நிலை பார்த்து எங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது. அதனால் மக்களுக்கு பயனுள்ள வகையில் இந்த சேவையை தொடங்கப்பட்டுள்ளது. நான் இருக்கும் வரை இந்த சேவையை செயல்படுத்துவேன். எனக்கு பிறகு எனது குடும்பத்தினர் அல்லது தன்னார்வலர்கள் இந்த சேவையை தொடர்ந்து நடத்தவும் நடவடிக்கை எடுப்பேன்,” எனக் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்