சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் உள்ள 2,582 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில், தகுதியான 41 ஆயிரத்து 485 தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. இதன்படி, தமிழ்நாட்டில் 130 மையங்களில் இன்று (பிப்.4) தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ள தகவலில், “தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில், 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மேற்பார்வையாளர் பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்ட 41 ஆயிரத்து 485 பேரில், 40 ஆயிரத்து 135 பேர் என 97 சதவீதம் பேர் தேர்வினை எழுதினர். 1,350 பேர், அதாவது 3 சதவீதம் பேர் தேர்வினை எழுதவில்லை. மாற்றுத்திறனாளிகள் 654 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்காக 146 சொல்வதை எழுதுபவர்களும் பயன்படுத்தப்பட்டனர்” என கூறியுள்ளார்.
முன்னதாக, இன்று காலை 8.30 மணி முதல் முழுவதும் சோதனை செய்த பின்னர் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் மொழித் திறன் அறிவதற்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடமான தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் இருந்து ஒரு பாடத்தில் 150 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கும் இடம் பெற்றது.
பின்னர், இதற்கான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு துவங்கிய நிலையில், 1.30 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு அறையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டனர். அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் தேர்வினைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொதுத்தேர்வினைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!