சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் (18) ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக, இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் பகுதிநேர வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கடை உரிமையாளர் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கடை உரிமையாளரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கந்து வட்டி பிரச்னை : சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர், வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி ராம் என்கிற ராமகிருஷ்ணன் (40). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை, கொள்ளை உட்பட 28க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், ரவுடி ராமகிருஷ்ணன் அரும்பாக்கம் ரவுடி ராதாவின் சகோதரர் ஆவார். இந்நிலையில் ரவுடி ராமகிருஷ்ணனிடம் அப்பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் சிலர் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.
குறிப்பாக ரூ.10 ஆயிரம் வாங்கினால் ஒரு வாரத்திற்கு வட்டியாக ரூ.1000மும், அதேபோல் ரூ.50 ஆயிரத்திற்கு வாரம் ரூ. 5 ஆயிரமும் என ஸ்பீடு வட்டி வசூத்து வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் கடன் வாங்கிய கூலி தொழிலாளி ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் கடனை செலுத்த முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த ரவுடி ராமகிருஷ்ணன் தனது அடியாட்களுடன் அவரது வீட்டிற்கு சென்று அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளி இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கந்துவட்டி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவுடி ராமகிருஷ்ணன் மற்றும் அவனது கூட்டாளி கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கஞ்சா பறிமுதல் : ஒடிசாவில் இருந்து ரயிலில் சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதாக அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றிரவு பெரம்பூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ரயில் நிலையத்தில் இருந்து கையில் பையுடன் வந்த வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் 6 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது (29) என்பதும், ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து சென்னையில் கஞ்சா வியாபாரியிடம் கொடுக்க முயன்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : கிண்டியில் கிடைத்த மனித எலும்பு கூடுகள் முதல் மதுபோதையில் வாலிபர்கள் செய்த ரகளை வரை.. - சென்னை குற்றச் செய்திகள்! - chennai crime news