சென்னை: விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் என்கிற வாராகி(50). இந்திய மக்கள் மன்ற நிறுவனரும், யூடியூபருமான இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம் போலீசார் மசாஜ் சென்டரில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் சேலையூர் சார்-பதிவாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைலாப்பூர் பகுதியில் வசிக்கும் கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் வைத்தியலிங்கம் (46) நேற்று முன்தினம் (செப்.12) மைலாப்பூர் காவல் நிலையத்தில் யூடியூபர் வாராகி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "யூடியூபர் வாராகி சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும் அதுமட்டுமின்றி வாராகி மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னிடம் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும்" குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பணம் கொடுக்காத பட்சத்தில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவேன் என மிரட்டி வருவதாகவும், அதுமட்டுமின்றி தன்னை போன்று பல சார்-பதிவாளர்களை வாராகி மற்றும் அவரது கூட்டாளிகள் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும்" புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், மைலாப்பூர் போலீசார் யூடியூபர் வாராகி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கொலை மிரட்டல், பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசுதல் உட்பட 8 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, மைலாப்பூர் போலீசார் விருகம்பாக்கத்தில் உள்ள வாராகி வீட்டில் வைத்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து போலீசார் வாராகியை சைதாப்பேட்டை 18வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, நீதிபதி வாராகியை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, போலீசார் யூடியூபர் வாராகியை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனு மேளா: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் நிறுவன மேலாண்மை இயக்குநர் தேவநாதன், நிறுவனத்தின் இயக்குநர்களான குணசீலன், மகிமை நாதன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (செப்.13) மற்றொரு இயக்குநரான சுதீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில் அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில் மனு மேளா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று(செப்.14) காலை மயிலாப்பூர் பைனான்ஸ் கிளப் என்ற இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மனு மேளா நடத்தப்படுகிறது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ள வால்மீகி தெருவில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் நேற்று முன் (செப்.13) இரவு அவரது நண்பருடன் மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது உடன் வந்த நண்பர் மார்கெட்டில் காய்கறி வாங்கச் சென்ற நிலையில், ஆட்டோவில் தனியாக இருந்த மணிகண்டனை அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் சரமாரியாகக் கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதனால் மணிகண்டனுக்கு தலை, கை, கால் ஆகிய 3 இடங்களிலும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளார். அப்போது மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்ற 6 மர்ம நபர்களை திருவான்மியூர் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.