சென்னை: காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், தமிழகத்தின் 38 மாவட்டங்களில், 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருவள்ளூர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது. இதில், அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
- வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் எழுச்சியாகத் தொடர்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
- கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அநேக கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாததால், வருகின்ற திங்கள் கிழமை (04.03.2024) மாலை 5.00 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரில் "கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைநகரில் ஒட்டுமொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் இரவு பகலாக தொடர்ந்து காத்திருப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
- மேலும் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகின்ற வியாழக்கிழமை (07.03.2024) முதலாக சென்னை வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
- இதிலும் தீர்வு எட்டப்படாத பட்சத்தில், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முற்றாக புறக்கணிப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
- வருவாய்த்துறை அலுவலர்களின் உணர்வுகளை தமிழக அரசு புரிய மறுக்கிறது. எனவே இன்று முதல் அனைத்து வகையான தேர்தல் பணிகள், இணையவழி சான்றிதழ்கள், அனைத்து ஆய்வுக் கூட்டங்கள், அரசு விழாக்கள், முக்கிய பிரமுகர் வருகைப் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் 100% முற்றாக புறக்கணிப்பது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
கடந்த எட்டு ஆண்டுகளாக காலதாமதம் செய்யப்படும் இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் விதித்திருத்த அரசாணை, மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் ஏற்கனவே அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகள் மீது, உடனடியாக ஆணைகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை; தஞ்சையில் பரப்புரையை தொடங்கிய நாதக வேட்பாளர் காளியம்மாள்