சென்னை: தமிழக மின்வாரியத்தில் 33 ஆயிரம் காலிப்பணியிடங்கள், அரசாணை 100 ஒப்பந்தத்தில் மாற்றங்கள் மற்றும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன் வைத்து ஜூன் 28ல் கண்டன ஆர்ப்பாட்டமும் மற்றும் ஜூலை 9ல் தொடர் காத்திருப்பு போராட்டமும் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இன்று இந்த போராட்டம் தொடர்பாக சென்னை மின்வாரிய தலைமையகத்தில் உள்ள சிஐடியு சங்கமனையில் அமைப்பு உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொது செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ”தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அடிமட்ட பணியிடங்களான களஉதவியாளர், கணக்கீட்டாளர், உதவி மின் பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாததால், ஏறத்தாழ 32 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனால் களப்பிரிவில் கூடுதல் பணிச்சுமையோடு பணியாற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிரப்பப்படாத பணியிடங்களும், வேலைவாய்ப்பின்மையும்: சமீபகாலமாக களப்பிரிவில் ஒப்பந்த ஊழியர்களாக இருப்பவர்கள் முதல் மின்பாதை ஆய்வாளராக இருப்பவர் வரை தினந்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துகளும் மற்றும் மரணமும் ஏற்ப்படுகிறது. ஏற்கனவே இதுகுறித்து திமுக அரசு பதவி ஏற்கும் முன்பு கூறியது போல் இன்னும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்து இந்த மூன்று ஆண்டுகள் கழித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பாமல், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் காலம் தாழ்த்துவது சரியல்ல என்பதை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்த்து கீழ்க்கண்ட கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். அப்படியும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் அரசு மேற்க்கொள்ளவில்லை என்றால், ஜூலை 9ஆம் தேதி முதல் மின்வாரிய வட்ட தலைமை அலுவலகம் முன்பு நாங்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளோம்" என கூறினார்.
மேலும் இதுகுறித்து காத்திருக்கும் போராட்டத்தின் கோரிக்கைகளாக தமிழக அரசுக்கு 20 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளது. அவை,
- மின்வாரியத்தில் அடிமட்ட பதவிகளான கள உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி மின் பொறியாளர், வரைவாளர் போன்ற 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பதவிகள் காலிப்பணியிடங்கள்ளாக உள்ளது. இவை தவிர சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதர பதவிகளில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு களப்பிரிவில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளதால், மின்தடையை விரைவாக நீக்கம் செய்ய முடியாத நிலை ஏற்ப்படுகிறது. இதனால் மின் நுகர்வோர்கள் மத்தியில் வாரியத்திற்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் பணிசுமை அதிகமாக இருப்பதால் ஊழியர்கள் வேலைபளு மற்றும் மனஅழுத்தத்தால் விபத்து ஏற்பட்டு தினந்தோறும் மரணம் அடைகின்றனர். எனவே, இதை கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
- இந்த ஆண்டின் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிட்ட அரசாணை 100இல் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருக்கும் அநீதிகளை களைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திட வேண்டும். மேலும் வெளியான மின்வாரிய பிரிப்பு, தொடர்பான அரசாணை 6 மற்றும் 7 கைவிடப்பட வேண்டும்.
- வேலைpபளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்ட (Re Deployment, Discontinue) என்ற முறையில் பதவிகளை கபளீகரம் செய்த உத்தரவுகளையும், B.P. 4 உத்திரவையும் திரும்பப்பெற வேண்டும்.
- அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக 5 லட்ச ரூபாய் தரும் திட்டதில், மின்வாரிய பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும். மேலும் இது தொடர்பான 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி வெளியான தமிழக அரசாணை எண் 197 பிறப்பித்ததுப்படி மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது.
- இந்த ஆண்டின் மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், மாண்புமிகு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் மின் விபத்தில் உயிர் இழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.அந்த அறிவிப்பை மின்வாரிய உத்தரவாக வெளியிட வேண்டும்.
- தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளவாறு பத்தாண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும்.
- பணி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பணப்பயன்களையும், பணியில் உள்ளவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும், பண்டிகை முன்பணம் உள்ளிட்ட அனைத்து பணப்பயன்களையும் வழங்கிட காலதாமதம் செய்வதை தவிர்த்திட வேண்டும்.
- கணக்கீட்டு பிரிவு பணியாளர்களுக்கு, கணக்கீடு பணி செய்வதற்கு மொபைல் போன்(Mobile Phone), அல்லது டாப்லேட் (TAB) வழங்கிட வேண்டும். அதற்கான நெட்வொர்க் தொகையாக மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கிட வேண்டும்.
- கணக்கீட்டுப்பிரிவு ஊழியர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட கணிணியின் (Computer) பிரிண்டர்(Printer), விசைப்பலகை(Key Board), சுட்டி(Mouse) மற்றும் வன்தட்டு நிலை நினைவகம் (HHD) ஆகியவற்றை புதியதாக வழங்கிட வேண்டும்.
- கணக்கீட்டாளர்களுக்கு விருப்ப மாறுதல் உத்தரவை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- கணக்கு உதவியாளரிலிருந்து கணக்கு மேற்பார்வையாளர் பதவியும், கணக்கு மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உதவி கணக்கு அலுவலர் பதவியும் வழங்கிட வேண்டும். அதே போல கணக்கீட்டுப்பிரிவில் கணக்கீட்டாய்வாளர், வருவாய் மேற்பார்வையாளர், மதிப்பீட்டு அலுவலர் ஆகிய பதவிகள் நிரப்பிட வேண்டும்.
- கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றம், கள உதவியாளராக பணி மாற்றம் ஆகியவை அளித்திட வேண்டும்.
- உள்முகத்தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட குருமதேதி ஜூன் 7ஆம் தேதி 2022 ஆண்டை கைவிட்டு வாரிய உத்தரவு 5 இன் படி ஜூலை 7ஆம் தேதி 2022ஆம் ஆண்டடையும் திரும்பப்பெற வேண்டும்.
- மின்வாரிய பணியாளர்கள் மரணம் அடைய நேரிட்டால் அவர்களது குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் வழங்க வேண்டிய வாரிசு வேலையை உடனடியாக வழங்கிட வேண்டும். தற்போது ஓராண்டிற்கு மேல் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது.
- 2019ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதிக்கு பின்பு வாரிய பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும்.
- 2019ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய அலவன்ஸ் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை உடனடியாக தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.
- இள மின்பொறியாளர், 2ஆம் நிலை பதவியில் இருக்கும் துணை மின் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களாக உள்ள காரணத்தால், பட்டயம் அல்லாத களப்பிரிவு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் இருப்பதை கணக்கில் கொண்டு, பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
- பிரிவு அலுவலகங்களில் தேவையான தளவாடப் பொருட்கள் வழங்கிட வேண்டும்.
- கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு தொடர்பான குழுவை அமைத்திட வேண்டும்.
- பகுதிநேர பணியாளர்களை நிரந்தரமாக்கமல் விடுபட்ட மீதமுள்ள பணியாளர்களை நிரந்தர பணியாளராக செய்திட வேண்டும்.
இதையும் படிங்க: சிபிஐ விசாரணையையும் நம்ப முடியாது..” கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் எவிடன்ஸ் கதிர் பேச்சு!