வேலுார்: காட்பாடி அடுத்த சேர்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்.7), மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளான அறிவியல் கண்காட்சி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன், கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியினை துவக்கி வைத்தார். இதில், 80க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் காட்சிப்படுத்திய, அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பாராட்டினார்.
நிகழ்ச்சியில், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் பேசுகையில், "உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய மாநில அரசுகள், அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், கண்டுபிடிப்புகளை மேம்படுத்தவும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலக அளவில், சந்திராயன் 3 ராக்கெட் தயாரித்ததில் கிராமப்புற விஞ்ஞானிகளின் பங்கு அதிக அளவில் இருந்தது.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அதிக ஊக்கம் அளிக்க, பல்கலைக்கழகம் தயாராக உள்ளது. மாணவர்களுக்கு கடின உழைப்பு, திறமை, புதிய கண்டுபிடிப்புகள், நேர்மையான வழியில் செல்லுதல் ஆகிய பண்புகள் இருந்தால் இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்ற முடியும்.
புதிய கண்டுபிடிப்புகள் கிராமங்களில் உள்ள கடை கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கப்பட வேண்டும். உயிர் கல்வியில், மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர்கள் முன்வர வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், அரசுக்கு தெரியப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு துவங்க அதிக அளவில் வாய்ப்புகள் இருக்கிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக ஊக்கம் அளிக்க பல்கலைக்கழகம் தயாராக உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!