சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதனைகத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.செல்வம், "இதுவரையில் இந்தியா பல பிரதமர்களைச் சந்தித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி எவரும் செய்ய முடியாத அற்பமான காரியங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்து வருகிறார். நாடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று பல தலைவர்கள் பாடுபட்டனர். அவர்கள் மத்தியில் மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்தோடு சாதி, மதம், மொழியை வைத்து அரசியல் செய்து வருகிறார்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒடிசா மாநிலத்தின் பூரி நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பூரி ஜெகந்நாதர் கோயிலின் சாவி ஆறாண்டுகளாக காணவில்லை. அது தமிழரகளிடம் இருப்பதாக பேசியிருந்தார். கோயிலின் சாவி ஆறாண்டுகளாக காணவில்லை என்பது தற்போது தான் அவருக்கு தெரிய வந்துள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "தமிழ்நாட்டிற்கு வரும்போது தமிழரின் பாரம்பரியத்தை உயர்த்தி பேசுகிறார். ஆனால், மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் போது, தமிழர்களை திருடர்களை போல் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இதனை பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து உள்ளார்கள். மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்தோடு பிரதமர் பேசுவதால் எஞ்சிய தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்பரையின்போது, எதிர்கட்சியைத் தாக்கி பேசியதாக அவரை ஒருநாள் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதேபோன்று, பிரதமர் மோடிக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்.
அதனை வலியுறுத்தி இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் தடை விதிக்கவில்லை என்றால், பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “சீரியஸாக இருந்த பிரதமர் நகைச்சுவை அடிக்க ஆரம்பித்துவிட்டார்”.. எம்பி திருநாவுக்கரசர்!